சேவைத் தடை: ஃபேஸ்புக் நிறுவனருக்கு 6 பில்லியன் டாலர் இழப்பு

2 mins read
e8ba1c28-3545-4df1-b382-4ba244246e66
படம்: ராய்ட்டர்ஸ் -

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்கள் சில மணி நேரம் இயங்காமல் போனதால் அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு யுஎஸ் 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று நள்ளிரவு வேளையில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் இந்தச் சமூக ஊடகங்கள் சேவை இழந்தன. அதனால் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் மக்கள் உட்பட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நிறுவன உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு திட்டமிடப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை.

பெயர் சொல்ல விரும்பாத பல ஃபேஸ்புக் ஊழியர்கள், உள்ளகத் தவறு காரணமாக இந்தச் செயலிழப்பு ஏற்பட்டதாக நம்புவதாக முன்னர் கூறியிருந்தனர்.

எனினும், செயல்படாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று நிறுவனத்தின் செய்தி கூறியது.

நிறுவனத்துக்கு எதிரான சதிச் செயலுக்கான சாத்தியமும் இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏற்பட்ட சேவைத் தடைக்கு மன்னிப்புக் கோரிய மார்க் ஸக்கர்பர்க். "நீங்கள் அனைவரும் நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்கு பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்," என்று பதிவிட்டுள்ளார்.

கூகலுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய இணைய விளம்பர விற்பனை நிறுவனமான ஃபேஸ்புக், சேவைத் தடங்கலின்போது அமெரிக்க விளம்பர வருவாயை ஒரு மணி நேரத்திற்கு சுமார் யுஎஸ் $545,000 (740,000 சிங்கப்பூர் வெள்ளி) இழந்தது என்று அமெரிக்க ஊடகச் செய்திகள் கூறின.

அதேநேரத்தில், வழக்கத்தைவிட நேற்று அதிகமானோர் டுவிட்டர் ஊடகத்தைப் பயன்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்