பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 48 வயது தைவானிய ஆடவர் ஒருவர் மாண்டுகிடந்ததை அடுத்து, தாய்லாந்துக் காவல்துறையினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 16ஆம் தேதி ஹோட்டல் அறையில் கை, கால் கட்டிப்போடப்பட்ட நிலையில் சூ சியாங் ஷென் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 21 வயது மியன்மார் நாட்டவரான ஸுவி லின் பியேவையும் 40 வயது கெமரூன் நாட்டவரான ஜான் அக்போரையும் கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
தைவானிய ஆடவரை தாங்கள் கொன்றதாகக் கூறப்படுவதைக் கைதான இருவரும் மறுத்துள்ளனர்.
தமக்கு உடந்தையாக இருந்த மூவருடன் கூட்டுச் சேர்ந்து சூவை கட்டிப்போட்டு அவரைக் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்ட ஸுவி, ஆனால் அவரைக் கொன்றதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
தாய்லாந்துப் பெண் ஒருவர் தமக்குப் பணம் கொடுத்து சூவை குறிவைக்க பணித்ததாக ஸுவி கூறினார். சூ பணக்காரர் என்றும் அவரிடம் குற்றப் பின்னணி இருந்தது என்றும் அப்பெண் தம்மிடம் கூறியதாக ஸுவி சொன்னார்.
பின்னர் சூவின் உடைமைகளைக் கொள்ளையடிக்க ஜான் அக்போருடனும் வெள்ளை இனத்தவர் ஒருவருடனும் ஸுவி கூட்டுச் சேர்ந்தார். சூவின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதே ஹோட்டலில் அறை ஒன்றை அவர்கள் வாடகைக்கு எடுத்தனர்.

நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் அம்மூவரும் சூவின் அறைக்குள் புகுந்தனர். சூவை அந்த வெள்ளை இனத்தவர் கட்டுப்படுத்த, ஸுவி அவரைக் கட்டிப்போட்டார். அறைக் கதவு பக்கம் நின்று கண்காணிக்கும் பொறுப்பை அக்போர் ஏற்றார்.
ஹோட்டல் அறையில் விலைமதிப்புமிக்க பொருள்களை ஆடவர் மூவரும் தேடியபோது பணம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. மடிக்கணினியையும் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பினர்.
இந்நிலையில், அந்த வெள்ளை இனத்தவரையும் 34 வயது தாய்லாந்துப் பெண்ணையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.