‘ஹாய்குவி’ சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி அவதி

‘ஹாய்குவி’ சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி அவதி

1 mins read
e9c7ebcc-c79a-46f1-a3ab-8fdb6064652d
ஹாய்குவி சூறாவளியால்160,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டது. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவானின் கிழக்கு, தெற்குப் பகுதிகளை ‘ஹாய்குவி’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து, 40,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விநியோகத்தைச் சீராக்கும் பணியில் தைவான் இறங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகரங்களும் மாவட்டங்களும் பள்ளிக்கூடங்களையும் தொழில்நிறுவனங்களையும் மூடின. உள்ளூர் விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்தன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தைவானின் தென்கிழக்குப் பகுதியையும் மலைப்பகுதிகளையும் ஹாய்குவி சூறாவளி தாக்கியது. அதன்பிறகு, அது தீவின் தெற்குப் பகுதியைக் கடந்துசென்றது.

நான்கு ஆண்டுகளில் தைவானைத் தாக்கியிருக்கும் முதல் சூறாவளி இது.

ஹாய்குவி சூறாவளியால் 160,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டதாக அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ‘தாய்பவர்’ மின்சார நிறுவனம் கூறியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்திற்குள் 50,000க்கும் குறைவான வீடுகளே மின்விநியோகம் திரும்பிவிடும் எனக் காத்திருந்ததாக அது தெரிவித்தது.

தைவானின் தெற்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களும் நகரங்களும் திங்கட்கிழமையன்று வகுப்புகளை ரத்துசெய்து, ஊழியர்களுக்கு ஒருநாள் விடுப்பை அறிவித்தன. தலைநகர் தைப்பேயில் பெருங்காற்றுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சூறாவளியால் ஐவர் காயமடைந்ததாக தைவானின் தீயணைப்புத் துறை கூறியது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து, குறிப்பாக தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து 7,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்தது.

ஹாங்காங்கையும் சீன மாநிலமான குவாங்டோங்கையும் தாக்கிய சோலா சூறாவளியைக் காட்டிலும், ஹாய்குவி சூறாவளி வலிமை குறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்