நோய் எதிர்ப்பாற்றலே எதிரியாகும்போது...

‘ஆட்டோ இம்யூன்’ பிரச்சினை குறித்து இளையர்கள்

ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அவரின் உடலையே தாக்குவதை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு என்பர்.

பல நோய்களுக்கான காரணத்தையும் விளக்கத்தையும் நாம் அறிந்திருந்தாலும் ‘ஆட்டோ இம்யூன்’ பிரச்சினை ஒருவரின் உடலைக் காரணமே இன்றி திடீரெனத் தாக்கும் தன்மையுடையது.

உலகில் 80க்கும் மேற்பட்ட ‘ஆட்டோ இம்யூன்’ நோய்வகைகள் உண்டு.

ஏன் இந்த நோய் தங்களுக்கு வந்தது, என்று தங்களுக்கு விடிவுகாலம் வரும் என்ற கேள்விகளுடன் இந்த நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களின் வாழ்நாளைக் கழித்திடுவர்.

இந்த நோயுடன் வாழப் பழகிக்கொண்ட இரு இளையர்களைப் பற்றியது இவ்வார இளையர் முரசு.

‘சொரியாசிஸ்’ 

சிறுவயதிலிருந்தே ‘சொரியாசிஸ்’ எனும் தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் புவனேஸ்வரி ரவிச்சந்திரன். படம்: புவனேஸ்வரி ரவிச்சந்திரன்

தனது தோலிலிருந்து செதில்கள் போன்று கொட்டும். மற்றவர்கள் இதைப் பார்த்து ஒதுங்கிப் போவர்.

மெல்லிய தோல் என்பதால் விருப்பப்பட்ட உடைகளை அணிய முடியாது. 33 வயதாகும் புவனேஸ்வரி ரவிச்சந்திரனுக்கு இது நாளடைவில் பழகிவிட்டது. 

ஏழு வயதிலிருந்து ‘சொரியாசிஸ்’ எனும் தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள புவனேஸ்வரி, இன்று ‘ஆட்டோ இம்யூன்’ நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறார்.

“ஆட்டோ இம்யூன் நோய் பிறருக்குப் பரவக்கூடியது அல்ல. ஆனாலும், என்னைப் பார்த்ததும் சிலர் ஓடி ஒளிவர்,” என்று புவனேஸ்வரி கூறினார்.

பள்ளி நாள்களில் மற்ற மாணவர்கள் தனது தோலைப் பார்த்து கேள்விகள் எழுப்பியபோது அவற்றை தூசு தட்டுவதுபோல் தட்டிவிட்ட புவனேஸ்வரி, முழுநேரப் பணியில் அமர்ந்தபோதுதான் தான் ஒதுக்கப்படுவதை உணர்ந்தார்.

“சிறப்புத் தேவையுடைய பள்ளி ஒன்றில் நான் பணியாற்றியபோது எனது தோல் பிரச்சினையை அறிந்திருந்த என்னுடைய மேற்பார்வையாளர், அது வெளியில் தெரியாதபடி உடைகளை அணியுமாறு வலியுறுத்தினார். இது என்னைப் பெரிதும் பாதித்தது,” என்றார் புவனேஸ்வரி.

கைகள், முழங்காலுக்குக் கீழுள்ள பகுதிகள், முதுகு ஆகியவற்றில் புவனேஸ்வரிக்கு ‘சொரியாசிஸ்’ உள்ளது. அவருக்கு மனவுளைச்சல் ஏற்பட்டால் அழற்சி அதிகரிக்கும். 

“என் குடும்பத்தாரும் நண்பர்களும் எனது நோய் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால், சமூகத்தில் உள்ள சிலர் என்னை அந்நியராக ஒதுக்குவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது,” என்றார் புவனேஸ்வரி.

பிறர் தன்னை வேறுபடுத்திப் பார்ப்பதால் புவனேஸ்வரி அந்தக் களங்கத்தை உடைத்தெறிய விரும்புகிறார்.

மேலும், தனக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தயக்கமின்றி விருப்பமான ஆடைகளை உடுத்திக்கொள்கிறார். 

‘லூபஸ்’

உடலின் நோயெதிர்ப்பாற்றல் உடலிலுள்ள திசுக்களையும் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் பிரச்சினை நூர் ஃபர்சானாவுக்கு உள்ளது. படம்: நூர் ஃபர்சானா

நடனமென்றால் 26 வயது நூர் ஃபர்சானாவுக்கு உயிர்.

தனியார் நடனப் பயிற்றுவிப்பாளரான இவர், ஒருமுறை வகுப்புக்குப் பிறகு தனது மூட்டுகள் வீங்குவதைக் கவனித்தார். தாங்க முடியாத வலியும் ஏற்பட்டது.

மருத்துவர் ‘ஆர்த்ரைடிஸ்’ எனப்படும் கீல்வாதம் இருப்பதாகக் கூற, ஃபர்சானா அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், நாளடைவில் அவரின் உடல்நிலை மோசமானது. சுறுசுறுப்பாக இருந்த ஃபர்சானா, காய்ச்சலுடன் மூன்று மாதமாகப் படுத்த படுக்கையாக இருந்தார்.

“வேறு மருத்துவரிடம் ஆலோசனை நாடியபோது எனக்குக் கீல்வாதம் இருப்பதை அவரிடம் சொன்னேன். மருத்துவர் கீல்வாதம் இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்காது என்றார். 

“எனக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மருத்துவர் கூறினார்,” என்றார் ஃபர்சானா.

நிபுணத்துவ மருத்துவர் உறுதிப்படுத்தியதன்படி ஃபர்சானாவுக்கு ‘சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ்’ (லூபஸ்) நோய் இருந்தது. உடலின் நோயெதிர்ப்பாற்றல் உடலில் இருக்கும் திசுக்களையும் மற்ற உறுப்புகளையும் பாதிப்பதே இந்த நோய்.  

நோய் தீவிரம் அடையாமல் இருந்ததால் ஃபர்சானாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படவில்லை. லூபஸ் நோய் பொதுவாக ஒருவரின் உறுப்புகளை அதிகம் பாதிக்கக்கூடியவை.

மூன்று மாதங்கள் ஒழுங்காகச் சாப்பிடாமல் இருந்ததால் ஃபர்சானாவுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அதனால் அவர் ஊட்டச்சத்து மருந்து, நோயின் தீவிரத்தை குறைக்க மாத்திரைகள் மற்றும் மிக முக்கியமாக ‘ஸ்டெராய்டு’ மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டியிருந்தது.

மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதிக முடி உதிர்தல், உடல் எடை விரைவாக அதிகரித்தல், எளிதில் மறந்துவிடுதல் என அவர் பலவகையிலும் பாதிக்கப்பட்டார்.

உடற்பயிற்சி மேற்கொண்டு, ஆரோக்கிய உணவுவகைகளை உட்கொண்டு வந்த ஃபர்சானாவுக்கு மற்றொரு வருத்தம்.

“நோயுற்ற காலத்தில் என் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் என் பக்கத்தில் இல்லை. அப்போதுதான் உண்மையாக என்னுடன் பழகியவர் யார் என்பதை உணர்ந்தேன்,” என்று கூறினார் ஃபர்சானா.

தன்னைப் போன்றவர்களுக்காக சமூக ஊடகத் தளத்தில் ஆதரவுக் குழு ஒன்றைத் தொடங்க விரும்புகிறார் இவர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!