பெரிய படங்களின் வெளியீடு: கோடம்பாக்கத்தை வட்டமிடும் வதந்திகள்

நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது. 

அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளில் சில திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

‘அண்ணாத்த’ படத்தில் இருந்து ரஜினி விலகிவிட்டார் என்றும் கொரோனா விவகாரத்தால் அவர் நடிப்புக்கே முழுக்கு போட்டுவிட்டார் என்றும் வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில், ரஜினி, விஜய், சூர்யா ஆகிய மூவருமே தங்கள் நடிப்பில் உருவாகியுள்ள புதுப் படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைத்திருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட அடுத்த வரிசை நடிகர்களின் படங்கள் முதலில் வெளியாக வழி ஏற்பட்டுள்ளது. 

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய இரண்டுமே  கிட்டத்தட்ட அவர்களின் சொந்த தயாரிப்பு மாதிரிதான். எனவே, முழுவதும் தயாராகிவிட்ட இப்படங்களை அடுத்தாண்டு  பொங்கலுக்கு வெளியிடுவது என இருதரப்புமே முடிவு செய்துவிட்டன. 

இதையடுத்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, தனுஷ் நடிக்கும் ‘ஜெகமே மந்திரம்’ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சிறிய பொருட்செலவில் உருவாகி வரும் படங்களுக்கான படப்பிடிப்பு உள் அரங்குகளில் சத்தமின்றி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  பாடல் காட்சிகள், ஒரே சமயத்தில் 3 அல்லது 4 பேர் மட்டுமே இடம்பெறும் காட்சிகளை முதலில் படமாக்கி வருகின்றனர். 

படப்பிடிப்புகளில் அறுபது பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது எனும் தமிழக அரசின் விதிமுறையும் பின்பற்றப்படுகிறது. 

இதேவேளையில், பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களின் படப்பிடிப்பு அக்டோபர் வரை நடக்காது என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் பிரபலங்கள் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு  செப்டம்பரில் துவங்க உள்ளது.

ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகுதான் துவங்க இருக்கிறது. அதற்குள் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என ரஜினி நம்புகிறாராம்.

முக்கிய அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் ரஜினி எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவேதான் அவரது தரப்பு மிகுந்த கவனத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. 

“ஆக மொத்தத்தில் செப்டம்பர் இறுதிக்குப் பிறகுதான் கோடம்பாக்கம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகமும் இயல்பு நிலைக்குத் திரும்பும். 

“அதுவரை வதந்திகளுக்கு மட்டும் குறைவிருக்காது. எனவே ரசிகர்கள் எல்லாவற்றையும் நம்பி ஏமாற வேண்டாம்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!