துப்புரவாளர்களின் கைவண்ணத்தில் தீபாவளி அலங்காரம்

தீபாவளி என்பது சிங்கப்பூரில் ஒரு சிறுபான்மையினர் கொண்டாடும் விழா. எனினும், பல இனம், மதம், கலாச்சாரம் உள்ள சிங்கப்பூரில் மற்ற இனத்தவரும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் குதூகலம் சேர்க்கின்றனர்.

லிட்டில் இந்தியா வட்டாரத்தைவிட்டு வெளியே வந்து தீவின் மற்ற இடங்களைப் பார்த்தால், எங்கும் தீபாவளி விழாக்கால உணர்வு களைகட்டியுள்ளது. கடைத்தொகுதிகள், குடியிருப்பு வட்டாரங்கள், அடுக்குமாடி புளோக்குகள் ஆகியவற்றில் தீபாவளி அலங்காரங்கள் அசத்துகின்றன.

அந்த வரிசையில் சுவா சு காங் அவென்யூ 5ல் அமைந்துள்ளது ‘இன்ஸ்’ (iNz) தனியார் கூட்டுரிமை வீடு. இங்கு தீபாவளிக்காக சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதைப் பார்ப்பதற்காக கூட்டுரிமை வீட்டு நிர்வாகக் குழுவிடம் அனுமதி பெற்று, அங்கு என்னதான் சிறப்பு என்று அதைப் பார்க்க ஆவலுடன் சென்றேன்.

வளாகத்தின் வரவேற்புப் பகுதியில் வந்து இறங்கியதும், வண்ணமிகு அலங்காரங்கள் என்னை வரவேற்றன. தீபாவளி வாழ்த்துகளும், வண்ண தாட்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளும் சேர்ந்த அலங்காரங்கள் களைகட்டியிருந்தன.

வளாகத்தின் மற்ற பொது இடங்களிலும் வண்ணவண்ண விளக்குகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட ஓர் அலங்காரம் என் கண்ணைப் பறித்தது.

பெரிய மயில் வடிவம். அதைச் சுற்றி மிளிரும் விளக்குகள். பார்ப்பதற்கே பளிச்சென்று அழகாக இருந்தது. மயில் இறகுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மயில் வடிவத்துக்குக் கீழ் இருந்த ஒலி பெருக்கியிலிருந்து பாரம்பரிய இந்திய இசை ஒலித்துகொண்டிருந்தது. இது தீபாவளி உணர்வை இன்னும் இரண்டுமடங்கு கூட்டியது.

இதை யார் வடிவமைத்தது என்று கேட்டபோது, கிடைத்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை அலங்கரித்தது குடியிருப்பாளர்களோ கட்டட நிர்வாகக் குழுவோ அல்ல. இந்த அலங்காரத்தைச் செய்தவர்கள் இங்கு வேலைபார்க்கும் துப்புரவு பணியாளர்கள் என்று அறிந்தேன்.
அனைவரும் மலாய்க்காரர்கள். இவர்களின் கைவண்ணத்தில் இந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

“நாங்கள் அனைத்து விழாக்களுக்கும் வளாகத்தை அலங்கரிப்போம். சென்றாண்டு தீபாவளிக்கு சிறிய அளவில் அலங்காரங்கள் செய்தோம். இந்த ஆண்டு வித்தியாசமாக செய்யலாம் என்று முடிவெடுத்தோம். மயில் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் அழகு, அன்பு, தன்னம்பிக்கை, வலிமை போன்றவற்றை பிரதிபலிக்கிறது. இதனால் மயிலைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தோம்,” என்று விளக்கினார் துப்புரவு மேற்பார்வையாளர் ஹாஃபிடா. அலங்காரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ததோடு, அலங்காரம் செய்த குழுவிற்கும் இவர் பொறுப்பேற்றிருந்தார்.

13 துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய குழு கடந்த இரண்டு மாதங்களாக இதற்காகக் கடுமையாக உழைத்தனர். ஓய்வு நேரத்தின்போதும், வேலை நேரத்துக்குப் பிறகும் அவர்கள் இந்த அலங்காரங்களைச் செய்தனர். இவர்களது படைப்பு குடியிருப்பாளர்களை மலைக்க வைத்துள்ளது.

“இங்குக் குறைவான இந்தியர்களே வசிக்கின்றனர். இருப்பினும், தீபாவளியைக் கொண்டாடுபவர்களைக் கருதி அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வசிக்கிறோம். சில இடங்களில் தீபாவளி வருவதற்கு முன்னரே கிறிஸ்மஸ் அலங்காரங்கள் போடப்படும். ஆனால் இங்கு அப்படி அல்லா. சிறுபான்மையினரையும் மதித்து அவர்களது உணர்வுகளையும் புரிந்து தீபாவளி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன,’ என்று இந்த முயற்சியை வரவேற்றார் குடியிருப்பாளர் உமா கோபால்.

அலங்காரம் அழகாகவும் இருக்கவேண்டும். அதே சமயம், அலங்காரத்துக்கான பொருட்களைசிக்கனமாகவும் வாங்கவேண்டும். மறுபயனீடு செய்யும் யோசனை குழுவிற்கு தோன்றியது.

“அட்டை, தாள்கள் போன்ற பல பழைய பொருட்களைச் சேகரித்து அவற்றுக்கு வண்ணம் பூசினோம். சிலவற்றின் மேல் வண்ணத் தாட்களை ஒட்டினோம். எங்கள் கற்பனைக்கு வந்ததை எங்கள் கைவண்ணத்தில் படைத்தோம், என்று ஹாஃபிடா குறிப்பிட்டார்.

தீபாவளிக்காக அலங்காரம் செய்ய விரும்பிய துப்புரவுக் குழு முதலில் நிர்வாகக் குழுவை அணுகியது.

“அவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடவடிக்கையில் ஈடுபட விரும்பினார்கள். அலங்காரக் கருப்பொருள் பற்றி எங்களிடம் தெரிவித்தபோது, எங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. அலங்காரம் எப்படி இருக்கும் என்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை. இது குறித்து இந்தியர்களும் மற்ற இன குடியிருப்பாளர்களும் நல்ல கருத்துகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்,” என்றார் குழுவிற்கு ஆதரவு அளித்த வளாகத்தின் மேலாளர் ரோசேலியா போ.

இடத்தைச் சுத்தம் செய்வதோடு நின்றுவிடவில்லை இந்தத் துப்புரவுக் குழுவின் பணி. குடியிருப்பாளர்கள் வாழும் இடத்தை அழகாக வைத்திருக்கவும் விழாக்கால உணர்வை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இக்குழு தங்கள் கடமையைத் தாண்டி பணியாற்றிவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!