35 பயணிகளை விட்டுவிட்டு ஸ்கூட் விமானம் சிங்கப்பூருக்குப் பறந்தது

35 பயணிகளை விட்டுவிட்டு ஸ்கூட் விமானம் சிங்கப்பூருக்குப் பறந்தது

2 mins read
77aad834-c5f1-424a-800d-e8f99dc56bde
2022 ஜூன் 2ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சாங்கி விமான நிலையத்தில் காணப்படும் ஸ்கூட் விமானங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஸ்கூட் விமானம், 35 பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே கிளம்பிய சம்பவம் குறித்து இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை (ஜனவரி 18) இரவு 7.55 மணிக்குப் புறப்படவிருந்த அந்த விமானம், இறுதியில் பிற்பகல் 3 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டது.

தங்களை ஏற்றாமல் விமானம் புறப்பட்டுவிட்டதால் கோபமடைந்த பயணிகள் போராட்டத்தில் இறங்க, விமான நிலையம் களேபரமானது. விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்கள் புகார் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஸ்கூட் விமான நிறுவன அதிகாரிகளை அமிர்தசரஸ் விமான நிலைய அதிகாரிகள் தொடர்புகொண்டனர். ஆனால், விமானம் புறப்படுவதில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக முன்னரே தெரியப்படுத்தி இருந்ததாக ஸ்கூட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"ஏறக்குறைய 280 பயணிகள் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யவிருந்தனர். ஆனால், 30க்கும் மேற்பட்டோரை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டுவிட்டது," என்று அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குநர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஸ்கூட் விமான நிறுவனத்திடமும் அமிர்தசரஸ் விமான நிலைய நிர்வாகத்திடமும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் விளக்கம் கேட்டுள்ளது.

குழுவாகச் சேர்ந்து பயணம் செய்த 30 பேருக்கு விமானப் பயணச்சீட்டுகளைப் பெற்றுத் தந்த பயண முகவை, விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று அமிர்தசரஸ் விமான நிலைய ஊழியர் ஒருவர் ஏஎன்ஐ நிறுவனத்திடம் சொன்னார்.

முன்னதாக, 'கோ ஃபர்ஸ்ட்' விமானத்தில் ஏறுவதற்காக 54 பயணிகள் காத்திருந்த நிலையில், அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டுச் சென்ற சம்பவம் பெங்களூரில் ஜனவரி 9ஆம் தேதி நிகழ்ந்தது.