குழாய் வேலை செய்து முன்னேற்றம் கண்ட தொழில்முனைவர்

வீட்டின் பொருளியல் நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக நல்ல வேலைவாய்ப்பைத் தேடி, தமது 24 வயதில் சிங்கப்பூருக்கு வந்தார் இப்போது 50 வயதாகும் கண்ணுசாமி சாந்தகுமார்.

வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்ற இவர் சிங்கப்பூருக்கு வந்தபோது குழாய்த்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

தனக்கு இயந்திரப் பொறியியலில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்து வந்ததாகக் கூறிய சாந்தகுமார், குழாய் தொழிலை ஒன்று விடாமல் நன்கு கற்றுத்தேர்ந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக ‘ஓம் பிளம்பிங் அண்ட் சானிட்டரி’ எனும் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

படித்தது ஒன்று, ஆனால் வேலை பார்ப்பது வேறு என்றாலும் குழாய்த் தொழில் அவருக்கு புலப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கும் சாந்தகுமார், அண்மையில் ‘ஸ்பிரிட் ஃஆப் என்டர்பிரைஸ்’ என்னும் லாபநோக்கற்ற நிறுவனம் நடத்திய வருடாந்தர நிகழ்வில் விருது வென்றார்.

‘எஸ்டாபிளிஸ்டு’ பிரிவில் விருது பெற்ற 28 பேரில் ஒரே இந்தியரான சாந்தகுமார் முதலில் இங்கு வந்தபோது வேலை அனுமதிச்சீட்டு வைத்துக்கொண்டு சாதாரண நிறுவனங்களில் குழாய் வேலை செய்து வந்தார்.

பல சவால்களைக் கடக்க வேண்டிய சூழலில் இருந்த இவர், “சிங்கப்பூருக்கு வந்தவுடன் நான் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி ஒரு தொழிலில் இறங்கினேன். தெரியாத தொழிலாக இருந்தாலும் அதை நன்கு கற்றுக்கொண்டு முன்னேறுவது எனது முனைப்பாக இருந்தது.” என்று நெகிழ்ந்தார்.

குழாய்த் தொழிலில் முன் அறிமுகம் இல்லாத சாந்தகுமார், தொடக்கத்தில் அதைக் கற்றுக்கொள்ளத் தடுமாறினாலும் இரவு பகல் பாராமல் தனது நேரத்தை வேலையில் அர்ப்பணித்தார்.

“குழாய்த் தொழிலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் அது அத்தியாவசியமான ஒரு தொழில். வீட்டில் திடீரென குழாய் சேதமடைந்துவிட்டால் மக்கள் விரைந்தோடுவது குழாய்த் தொழில் செய்பவர்களிடம்தான்,” என்று கூறிய சாந்தகுமார், தான் இதை ஒரு சேவையாக மக்களுக்குச் செய்வதாகப் பகிர்ந்துகொண்டார்.

உயரமான இடங்களில் வேலை பார்ப்பது, குழாய்களை சில நேரங்களில் அகற்றி அதில் ஏதாவது அடைப்பு இருந்தால் அதை வெளியேற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபடும் சாந்தகுமார், சில நேரங்களில் கெடுமணம் வீசினாலும் அதை பொருட்படுத்தாது, கடமைக்கு முதலிடம் தருகிறார்.

மூன்று நிறுவனங்களில் மொத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சாந்தகுமார், அதே நேரத்தில் குழாய்த் தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் பயிற்சியளித்து வந்தார். நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட உரையாடலில் உதயமானது இவரது தொழில்முனைவர் பயணம்.

சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டுமென்பது சாந்தகுமாரின் சிறுவயதுக் கனவு. அது சிங்கப்பூரில் அவருக்கு நனவானது. வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட பத்துப் பேரை வேலைக்கு வைத்துக்கொண்டு தொழில் நடத்தும் சாந்தகுமாருக்கு கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது தொழில் சற்று மந்தமானது. அப்போது, மற்றொரு தீர்வாக அத்தியாவசிய சேவை உரிமம் பெற்று வீட்டில் இருக்கும் குளிரூட்டிகளைப் பழுதுபார்க்கும் தொழிலை மேற்கொண்டார்.

இன்று இவரது நிறுவனத்தில், குழாய், குளிரூட்டிப் பழுதுபார்ப்பு என இரு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தன் மூத்த மகள் அந்த விருதிற்குத் தன்னைப் பரிந்துரைத்ததாகப் பகிர்ந்துகொண்ட சாந்தகுமார், “எந்த வேலையிலும் சிறக்க ஒருவர் முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதானமாக வேலை பார்த்து தொழிலில் சிறந்து விளங்கினால், வெற்றி நம்மைத் தேடி வரும்,” என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!