கெத்தே - கோல்டன் வில்லேஜ் திரையரங்குகள் இணைக்கப்படும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இதன் தொடர்பில், சிங்கப்பூரில் கோல்டன் வில்லேஜ் திரையரங்குகளை நடத்தி வரும் ‘ஸ்கை கோல்டன் ஹார்வெஸ்ட் என்டர்டெயின்மென்ட் (ஹோல்டிங்ஸ்) லிமிடெட் (ஓஎஸ்ஜிஎச்)’ நிறுவனத்துடன் முதற்கட்ட உடன்பாடு எட்டப்பட்டு உள்ளதாக கெத்தே திரையரங்குகளின் உரிமையாளரான ‘எம்எம்2 ஏஷியா’ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
அந்த உடன்பாட்டின்படி, தங்களது கூட்டுத்தொழிலில் அதிக முதலீடு செய்யும் வகையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க அவ்விரு நிறுவனங்களும் இலக்கு கொண்டு உள்ளன.
இவ்விணைப்பு சாத்தியமானால், சிங்கப்பூரின் ஆகப் பெரிய திரை அரங்குத் தொழில் நடத்துநராக அக் கூட்டு நிறுவனம் உருவெடுக்கும்.
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள எம்எம்2 ஏஷியா நிறுவனம் ‘கெத்தே’ பெயரில் சிங்கப்பூரில் எட்டுத் திரையரங்கு வளாகங்களையும் மலேசியாவில் 14 திரையரங்கு வளாகங்களையும் கொண்டுள்ளது. அத்துடன், திரைப்பட விநியோகத் தொழிலிலும் இணையவழி ஒளிபரப்புத் தொழிலிலும் அது ஈடுபட்டு வருகிறது.
ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள ‘ஓஎஸ்ஜிஎச்’ நிறுவனம், சிங்கப்பூரில் 14 கோல்டன் வில்லேஜ் திரையரங்கு வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 35 திரையரங்கு வளாகங்களை அந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.
கொவிட்-19 நோய்ப் பரவலால் திரையரங்குத் தொழில் கடும் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இவ்விரு திரையரங்கு நிறுவனங்களின் இணைப்பு அதிக நிதி, செயல்பாட்டு நிலைத்தன்மையை வழங்கும் என்று எம்எம்2 ஏஷியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆயினும், இந்த உடன்பாடு பல ஒழுங்குமுறைத் தடைக்கற்களை எதிர்கொண்டுள்ளது. இணைப்பு நடவடிக்கைக்கு இரு நிறுவனங்களின் பங்குதாரர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும்; சிங்கப்பூர், ஹாங்காங் பங்குச்சந்தைகளும் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உறுதியான உடன்படிக்கை எட்டப்படாவிடில் அல்லது முன்மொழியப்பட்ட ஒப்பந்த விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் முதற்கட்டமாக எட்டப்பட்ட உடன்பாடு ரத்தாகிவிடும்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், சிங்கப்பூர் கோல்டன் வில்லேஜ் திரையரங்கு வர்த்தகம் $2.9 மில்லியன் இழப்பைச் சந்தித்ததாக ‘தி எட்ஜ் சிங்கப்பூர்’ குறிப்பிட்டது.
அதேபோல, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரைக்குமான ஆறு மாத காலத்தில் எம்எம்2 ஏஷியா நிறுவனத்திற்கு $22.4 மில்லியன் நிகர இழப்பு ஏற்பட்டது.