வானதி: பட்ட துன்பங்களை படிகளாக்கி பெண்கள் முன்னேற வேண்டும்

பெண் சமத்துவம் என்பது இன்றைய உலகின் தேவை. ஆகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கும் பெண் சமத்துவத்தில் முக்கியப் பங்குண்டு என்பது இந்திய அரசியல்வாதியும் சமூக நல விரும்பியுமான திருவாட்டி வானதி சீனிவாசனின் அனுபவம். 

இன்றைய இந்தியாவில் பெண் சிசுக் கொலை குறைந்துள்ளது; வசதிகுறைந்த பெண்களைத் தேடி அடிப்படை சுகாதார வசதிகள் சென்றடைந்துள்ளன. பெண் தொழில் முனைவர்கள் அதிக அளவில் முளைத்தும் வளர்ந்தும் வருகின்றனர் என்று திருவாட்டி வானதி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“கொவிட்-19 காலத்தில் நிச்சயமற்ற பொருளியல் சூழலைக் கையாண்டு இந்தியாவின் பொருளியல் மீட்சியை வழிநடத்தியவர் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன். 

“அதேபோல ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ சஞ்சிகையால் ‘இந்தியாவின் ஆக அதிகமாக நேசிக்கப்பட்ட அரசியல்வாதி’ என அறியப்பட்டவர், காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ். 

“இவ்விருவரின் வாழ்க்கையும் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்குச் சான்று. இப்போதைய இந்திய அரசில் ஆக அதிகமாக 11 பெண் அமைச்சர்கள் இருப்பதும் இதற்குச் சான்று,” என தமிழ் முரசிடம் கூறினார் திருவாட்டி வானதி. 

சிங்கப்பூருக்குக் கடந்த வாரம் வந்திருந்த இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் வெளியுறவு அமைச்சும் இணைந்து நடத்திய ஐந்து நாள் பெண் தலைமைத்துவப் பயிலரங்கில் கலந்துகொண்டார். 

அத்துடன், இந்தோனீசியா, மலேசியா, இலங்கை, கம்போடியா முதலிய 18 நாடுகளில் உயர்பதவி வகிக்கும் பெண்களுடன் திருவாட்டி வானதியும் இணைந்து, தலைமைத்துவப் பண்புகளை மெருகூட்டுவது குறித்து அதிகம் அறிந்துகொண்டார். 

கோவை தெற்கு சட்டமன்ற உறுப் னரான இவர், சிங்கப்பூருக்கு வருகைபுரிவது இது மூன்றாம் முறை. 

2020ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மகளிரணி தேசிய தலைவராகச் செயலாற்றி வரும் திருவாட்டி வானதி, அண்மையில் பாஜக தேசிய தேர்தல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகாலமாக பாஜகவில் சேவையாற்றி வருகிறார் இவர். 

விவேகானந்தரும் பாரதியாரும் துணை

‘ஆண்கள் உலகம்’ என அரசியலைக் குறிப்பிடும் இவர், “அரசியலில் பெண்கள் காலடி எடுத்து வைப்பதே கடினம்; அதனையும் கடந்து தடம் பதிப்பது இன்னும் சவாலானது. ஆயினும் இந்நிலை இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது,” என்றார் இவர். 

கிராமத்தில் பிறந்து, விவசாயக் குடும்பத்தில் வளர்ந்து, கல்லூரிப் பருவம் வரை தமிழ்ப்பள்ளியில் பயின்ற திருவாட்டி வானதிக்கு எதிரே வரிசையாக வந்து நின்றது எல்லாம் சவால்கள். 

இளம் வயதிலிருந்தே பிடிமானம் தந்துள்ள விவேகானந்தரும் பாரதியாரும் தமக்குத் துணைநின்றதாகத் தெரிவிக்கிறார் இவர். 
பொது வாழ்க்கை முழுவதும் இவரது முன்னேற்றத்தின் குறுக்கே பல இடையூறுகள்.

2015ஆம் ஆண்டு தமக்கு எதிராக அவதூறு பரப்ப சமூக ஊடகச் குழுக்கள் சில படையெடுத்திருந்ததாகக் கூறினார் திருமதி வானதி. 
அப்போது அவதூற்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் இவர் பெற்றார். 2011, 2016 என இரு முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் திருவாட்டி வானதி. 

மனந்தளராமல், மக்களுடன் இன்னும் நெருக்கமாகிக்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கைப்பற்றி, ஐந்தாண்டுகளுக்குமுன் தோல்வி தந்த அதே கோவை தெற்குத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனைத் தோற்கடித்து இவர் வென்றார். 

தம்மைப்போன்ற பெண்களின் அரசியல் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வண்ணம், பெண் அதிகாரமளித்தலைவிட, பெண்களால் முன்னெடுக்கப்பட்ட அதிகாரமளித்தலை பாஜக பெரிதும் வலியுறுத்தி வருவதாகக் கூறு கிறார் இவர். 

தனிப்பட்ட கனவு

“இரவில் பெண்கள் தனியே வீதிகளில்  பாதுகாப்பாக நடந்து செல்லலாம் என்னும் நிலை சிங்கப்பூரில் உள்ளது. இதேபோன்று எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பெண்கள் பாதுகாப்பாக உணரும் ஓர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கனவு.

“பெண்களுக்கு எதிரான குற்ற, பாலியல் வன்கொடுமை விகிதம் சிங்கப்பூரில் மிகக் குறைவாகவே உள்ளது. செவ்வனே திறம்பட நீதி வழங்கும் முறை இங்கு நடப்பில் உள்ளதைக் காண்கிறேன். 

“ஒவ்வொரு முறை சிங்கப்பூருக்கு வரும்போதும் என்னை இவை வியக்க வைக்கத் தவறியதில்லை,” எனக் குறிப்பிடுகிறார் இவர். 
இத்தகைய சூழல் உருவாவதற்கு மக்களின் எண்ணப்போக்கை மாற்றியமைப்பதே முதல் படி என்பது திருவாட்டி வானதியின் எண்ணம். 

“பெண்களுக்கு எதிராக ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சில வழிகளில் எதிராக இருக்கின்றனர். சில தாய்மார்களே பெண் குழந்தைக்கு ஓர் உணவு, ஆண் குழந்தைக்கு வேறோர் உணவு என பாகுபாட்டுடன் வளர்க்கின்றனர். 

“பிள்ளைகளுக்கு சமத்துவப் பண்புகளை ஊட்டுவது அவசியம்,” என்று இவர் கூறினார். 

இதற்கு தமது இரு மகன்களும் விலக்கல்ல என்றும் பாரபட்சமற்ற நடத்தையை அவர்களிடத்தில் வலியுறுத்தி வருவதாகவும் இவர் கூறுகிறார். 

பெண்கள் பிற பெண்களின் நலன் பேண வேண்டும் என்பது திருவாட்டி வானதி வலியுறுத்தும் கருத்துகளில் ஒன்றாகும். 
அத்தகைய ஒரு முயற்சிதான், இவர் 2015ல் அமைத்த ‘தாமரை சக்தி டிரஸ்ட்’ எனும் லாபநோக்கமற்ற அமைப்பு. 

பெண்கள் தங்களது அடையாளங்களை வெளியிடாமல் தங்களது பிரச்சினைகள் குறித்து புகாரளிக்கவும் தீர்வுகாணவும் உதவும் மின்னிலக்க சேவையாக இது இயங்கி வருகிறது. பெண்களுக்காக குரல் கொடுப்பதிலும் இவரின் பங்களிப்பு தொடர்கிறது. 

மருத்துவச் சிக்கலால் பாலினத் தேர்வில் தோல்வி அடைந்து, தனது பதக்கத்தை இழந்த திடல்தட வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனின் ‘ஜஸ்டிஸ் ஃபார் சாந்தி’ இயக்கத்துக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார் திருவாட்டி வானதி. 

இத்தேர்வை விலக்கவேண்டும் என்ற அவரது போராட்டத்துக்கு ஊக்கமும் அளித்தார். 

ஈடு இணையற்ற உழைப்பு பெண்களுக்குத் தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் திருவாட்டி வானதி, எவ்விதச் சலுகைகளையும் எதிர்பாராமல், திறன்களையும் எண்ணங்களையும் பெண்கள் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு உறுதியுடன் விளங்கினாலே அங்கீகாரம் தேடிவரும் என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!