'ஒட்டு மொத்த சம்பள அதிகரிப்பு 3.7% ஆக இருக்கலாம்'

சிங்கப்பூரில் சம்பளங்கள் அடுத்த ஆண்டில் அதிகரிக்கக்கூடும் என்றாலும் திறனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஊழியர்களைத் தக்க வைத்து கொள்ள நிறுவனங்கள் இதர அனுகூலங்களை அவர்களுக்கு வழங்க நேரிடலாம் என்று மெர்சர் ஆய்வு குறிப்பிடுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான ஒட்டு மொத்த சம்பள அதிகரிப்பு 3.7 விழுக்காடாக இருக்கலாம் என்றும் ஆய்வு கூறியது. ஒப்புநோக்க, இந்த ஆண்டில் சம்பள உயர்வு விகிதம் 3.6% என்றும் மெர்சர் தனது வருடாந்திர மொத்த சம்பள ஆய்வறிக்கையில் தெரிவித்தது.

“சம்பள அதிகரிப்பு ஒருபுறம் இருக்க ஊழியர்களைத் தக்க வைத்து அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க, முதலாளிகள் சம்பள உயர்வுடன் இதர அனுகூலங்களை வழங்க வேண்டியிருக்கும்,” என்றும் ஆய்வு விளக்கியது.

திறனாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து போனஸ் வழங்கும் போக்கை அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் கையாளுகின்றன. 

அந்த வகையில் இந்த ஆண்டில் மூன்றில் ஒரு நிறுவனம் அவ்வாறு செய்தது. கடந்த ஆண்டில் அந்த விகிதம் நான்கில் ஒரு நிறுவனம்.

நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நிறுவனங்கள் 10.6 விழுக்காடும் மேல் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு 11.6 விழுக்காடு அதிக சம்பளம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்த மெர்சர், இந்தப் பிரிவினரில் எவராவது அதற்கும் மேல் நிலைக்கு முன்னேறினால் அவர்களுக்கு முறையே 14.4 விழுக்கா டும் 15.3 விழுக்காடும் அதிக சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,000 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றுடன் புதிதாக உபசரிப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களும் ஆய்வில் சேர்ந்துகொண்டுள்ளதால், ஆய்வில் பங்கேற்கும் துறைகளின் எண்ணிக்கை 19க்கு உயர்ந்துள்ளது.

இந்தத் துறைகளில் வாடிக்கையாளர் சரக்குகள், வாழ்க்கைபாணி தொடர்பான சில்லறை விற்பனைப் பொருட்கள்,  உயிர் அறிவியல் ஆகியவை சிறிய அளவிலான சம்பள உயர்வைப் பதிவு செய்திருந்தன என்றும் மெர்சர் நிறுவனம் தெரிவித்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity