சிங்கப்பூர் தேர்தல்: 93 இடங்களுக்கு 192 பேர் போட்டி

தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்தப் பொதுத் தேர்தலிலும் எல்லாத் தொகுதிகளுக்கும் போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள 93 எம்.பி. பதவிகளையும் கைப்பற்றும் நோக்கில், ஆளும் மக்கள் செயல் கட்சி 17 குழுத் தொகுதிகள், 14 தனித் தொகுதிகள் என எல்லா இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி இருக்கிறது.

இம்முறை அக்கட்சி 27 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

மொத்தம் 11 கட்சிகள் களத்தில் உள்ளன. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தமட்டில், ஆக அதிகமாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 24 இடங்களுக்குப் போட்டியிடுகிறது.

பாட்டாளிக் கட்சி 21 வேட்பாளர்களையும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 11 பேரையும் நிறுத்தியுள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் மக்கள் குரல் கட்சியும் தரப்புக்குப் பத்துப் பேரைக் களமிறக்கி இருக்கின்றன.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியில் மசெக, மக்கள் குரல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயக முன்னணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அதேபோல, பைனியர் குழுத் தொகுதியிலும் மசெகவின் பேட்ரிக் டே, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லிம் செர் ஹோங், சுயேச்சை வேட்பாளர் சியாங் பெங் வா என மூவர் களமிறங்கியுள்ளனர்.

மசெகவின் புதுமுக வேட்பாளர்களில் இருவர் புதிதாக உருவாக்கப்பட்ட தனித் தொகுதிகளில் இருந்து போட்டியிடுகின்றனர்.

மேரிமவுண்ட் தனித்தொகுதியில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் கான் சியாவ் ஹுவாங்கும் இயோ சூ காங் தனித்தொகுதியில் மூத்தோர் தலைமை அலுவலகத்தின் முன்னாள் குழுமத் தலைவர் யிப் வோன் ஹெங்கும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் வெஸ்ட் என குறைந்தது மூன்று தனித்தொகுதிகளில் கடும் போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 10ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் 2.65 மில்லியன் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online