திருடிய வாகனத்தை ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்ற 19 வயது ஆடவர் ஒருவரை நிறுத்த முயன்றபோது ஐந்து போலிசாருக்கு காயம் ஏற்பட்டது.
வாகனம் ஒன்று திருடப்பட்டதாக நேற்று முன்தினம் சனிக்கிழமை (அக்டோபர் 30) இரவு 8.30 மணிக்குப் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
கார் பகிர்வுச் சேவை வழங்கிய 22 வயது ஆடவர் ஒருவர் அது பற்றி போலிசிடம் தகவல் அளித்திருந்தார்.
காரில் இருந்த மற்ற இரண்டு பயணிகளுக்காக அவர் சிகரெட்டு வாங்க கீழே இறங்கியபோது அந்த இருவரும் காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
களவாடப்பட்ட அந்த காரை ஓட்டிய 19 வயது ஆடவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு அடையாளம் குறிப்பிடப்படாத போலிஸ் கார் ஒன்றையும் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றையும் மோதிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.
அதில், அதிகாரிகளுக்குக் காயம் ஏதுமில்லை.
போலிஸ் புகைப்படக் கருவிகளின் உதவியுடன் ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் அந்த 19 வயது ஆடவர் பிடிபட்டார்.
மற்றவர்களைச் செயலிழக்க வைக்கும் ‘ஸ்டன்’ கருவி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
நேற்றுக் காலை 9 மணிக்கு அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள கார் நிறுத்துமிடத்தில், அந்த கார் இருந்ததை போலிசார் கண்டனர். அதைத் திருடிச் சென்ற மற்றொரு 19 வயது ஆடவர், அப்போது அதை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருடன் இன்னொரு ஆணும் இருந்தார்.
காரை விட்டு வெளியேறும்படி போலிசார் கூறியபோது, அவர் வேகமாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
அதில் மூன்று போலிஸ் அதிகாரிகள் விழுந்ததில் அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
தப்பிச் சென்ற அந்த காரை, அடையாளம் குறிப்பிடப்படாத போலிஸ் கார் ஒன்று துரத்திச் சென்றது.
தப்ப முயன்ற அந்த 19 வயது ஆடவர், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களையும் துரத்திச் சென்ற அந்த போலிஸ் காரையும் மோதியது. அந்த போலிஸ் காரில் இருந்த இரண்டு அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.
இறுதியில் லென்டோர் பிளேன் பகுதியில் அந்த காரை போலிசார் பிடித்தனர். அந்த காரில் பட்டாக்கத்தி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

அந்த காரின் ஓட்டுநரும் பயணியும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் போலிசாருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
காரைக் களவாடிய இரண்டு 19 வயது ஆடவர்கள்மீது, பொது நோக்கத்துடன் வாகனத் திருட்டின் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
திருட்டுச் சம்பவத்தில் தொடர்பிருந்த சந்தேகத்தின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
போலிஸ் இன்று (நவம்பர் 1) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.