காதலியுடன் வேறொருவர் பேசியதால் கோபம்: கத்தியால் தாக்கியதை ஒப்புக்கொண்ட ஆடவர்

தம்முடைய காதலியுடன் வேறோர் ஆடவர் பேசிக்கொண்டிருந்ததால் சினமடைந்த முகம்மது சஜித் சலீம், 20, இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பூன் லேயில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின்போது ரொட்டி வெட்டும் கத்தியைக் கொண்டு அந்த ஆடவரைத் தாக்கினார்.

ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகளை சஜித் புதன்கிழமை (நவம்பர் 2) ஒப்புக்கொண்டார்.

2020 ஜூலை 1க்கும் 2021 டிசம்பர் 30க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ரகசியக் கும்பல் ஒன்றில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டை இவர் எதிர்நோக்கிறார்.

தம்முடைய முன்னாள் காதலி, திரு பிரவீன் ராஜ் சந்திரன் எனும் 23 வயது ஆடவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை அறிந்து இவ்வாண்டு பிப்ரவரியில் சஜித் கோபமடைந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஆர்.அர்விந்தரன் நீதிமன்றத்தில் கூறினார்.

திரு பிரவீனை தொலைபேசி மூலம் அழைத்த சஜித், தம்முடைய காதலியைத் தொடர்புகொள்ள வேண்டாம் எனக் கூறினார். இது, இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. மார்ச் இறுதியில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திரு பிரவீனுக்கு எதிராக தாக்குதல் நடத்த சஜித் திட்டம் தீட்டினார்.

திரு பிரவீனை தாம் தாக்க வேண்டும் என்று ஏப்ரல் 5ஆம் தேதி தம்முடைய நண்பரான 19 வயது ஆடவரிடம் சஜித் கூறினார். சஜித் இருந்த அதே ரகசியக் கும்பலில்தான் அந்த ஆடவரும் இருந்தார்.

சஜித்துக்கும் திரு பிரவீனுக்கும் தெரிந்த நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு பூன்லே டிரைவில் நடைபெற்றது. அதில் திரு பிரவீன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், சஜித்தும் அந்த 19 வயது ஆடவரும் 23.5 செ.மீ. நீளமுள்ள இரு கத்திகளை வாங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி புளோக் 175 பூன் லே டிரைவுக்குச் சென்றனர்.

திரு பிரவீனின் சமூக ஊடகப் பதிவுகளைப் பின்தொடர்ந்து அவரது நடமாட்டத்தை அவர்கள் கண்காணித்தனர். மாலை 4.50 மணியளவில் வாகனம் ஒன்றிலிருந்து திரு பிரவீன் வெளியேறுவதை அவர்கள் கண்டனர்.

திரு பிரவீனை நோக்கி அந்த இணை ஓடினர். திரு பிரவீனின் தலையில் சஜித் கத்தியை வீசினார். அதை திரு பிரவீன் தம் கைகளால் தடுத்ததைத் தொடர்ந்து, அவரது கையை அந்த இணை தாக்கினர்.

திருமணக் கொண்டாட்டக் குழுவில் இருந்த திரு சரண்குமார் சுப்பிரமணியம், 22, தாக்கியவர்களிடம் கூச்சலிட்டார். அதையடுத்து, சஜித் அவரது தலையில் கத்தியால் தாக்கினார்.

அங்கிருந்த ஓட்டம்பிடித்த திரு பிரவீனைத் துரத்திய அந்த இணை, அவரது உடலின் மேற்பகுதியிலும் கைகளிலும் பலமுறை கத்தியால் தாக்கினர். அவரை உதைக்கவும் செய்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, தமது திருமண நிகழ்வை சீர்குலைக்க வந்தது எதற்காக என அந்த இணையிடம் கேட்டார். சஜித்துக்கு உடந்தையாக இருந்த அந்த 19 வயது ஆடவர், மாப்பிள்ளையைத் தாக்க முற்பட்டார். ஆனால், தமக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை என்பதால் அவரைக் காயப்படுத்த விரும்பாத சஜித், தமக்கு உடந்தையாக இருந்தவரைத் தடுத்து பின்னால் இழுத்தார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சஜித்தும் அந்த 19 வயது ஆடவரும் குப்பைத் தொட்டியில் கத்தியை வீசிவிட்டு, உட்லண்ட்சில் உள்ள தங்களுடைய நண்பரின் வீட்டிற்கு தனியார் வாடகை கார் மூலம் சென்றனர். காவல்துறையிடம் சிக்காமல் இருக்க, அந்த நண்பர் சஜித்திடம் மாற்று உடைகளை வழங்கினார்.

இந்தத் தாக்குதலைக் காட்டும் காணொளிகள், அன்றைய இரவுக்குள் சமூக ஊடகங்களில் பரவலாகின. சஜித்தையும் அந்த 19 வயது ஆடவரையும் தேடிப் பிடிக்கும் நடவடிக்கை தொடங்கியது. தாங்கள் எப்படியாவது பிடிபட்டுவிடுவோம் என்பதை அறிந்த அந்த இணை, அடுத்த நாள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

இச்சம்பவத்தில் காயமுற்ற திரு பிரவீனும் திரு சரண்குமாரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் பயங்கரமானது என்று வர்ணித்த அரசாங்க தரப்பு வழக்கறிஞர் அர்விந்தரன், சஜித்துக்கு 39 மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்க நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

சஜித்துடைய வழக்கறிஞரான திரு என்.திவாணன், சஜித்தை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்ப முடியுமா என்பதை தீர்மானிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிடக் கோரி நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

சஜித்துக்கு சீர்திருத்தப் பயிற்சி அளிக்கலாம் என்று அறிக்கை காட்டினாலும், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கோருவதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று வழக்கறிஞர் அர்விந்தரன் வாதிட்டார்.

இந்நிலையில், சீர்திருத்தப் பயிற்சி அறிக்கையை வெளியிட மாவட்ட நீதிபதி கேரல் லிங் உத்தரவிட்டார். தடுப்புக்காவலில் உள்ள சஜித், நவம்பர் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!