ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கும் ஒருவழியாக மகாத்மா காந்தி சிலை கிடைத்துள்ளது.
ரோவில் எனும் பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய இந்தியச் சமூக நிலையத்தில் பிரதமர் ஸ்காட் மோரிசன், காந்தியின் சிலையைத் திறந்துவைத்தார்.
கேன்பரா, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய நகர்களில் ஏற்கெனவே காந்தியின் சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் மெல்பர்ன் நகரில் இப்போது காந்தி சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட காந்தி சிலையின் எடை 426 கிலோகிராம்.
பிரதமர் மோரிசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார். அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தாம் சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள சிறந்த உறவுமுறை குறித்து பெருமையுடன் பேசினார்.
மெல்பர்னில் ஏற்கெனவே கொவிட்-19 முடக்கநிலை நடப்பில் இருந்ததால், காந்தி சிலையைத் திறந்துவைப்பது ஒத்திவைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
