அர்ஜெண்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலெய் தேர்வு

பியூனஸ் ஐரஸ்: அர்ஜெண்டினாவின் புதிய அதிபராக சுதந்திரவாதக் கொள்கையாளர் திரு ஜேவியர் மிலெய், 53, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் அவர் 56 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பொருளியல் அமைச்சர் செர்கியோ மஸ்ஸாவிற்கு ஆதரவாக 44 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் தெரிவித்தன.

மூன்று இலக்கப் பணவீக்க விகிதம், பொருளியல் மந்தநிலை, அதிகரிக்கும் வறுமை ஆகியவற்றால் நலிவுற்றுள்ள அர்ஜெண்டினாவின் பொருளியலை திரு மிலெய் மீட்டெடுப்பார் என்று நாட்டு மக்கள் நம்புவதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திரு மாஸ்ஸா தமது தோல்வியை ஒப்புக்கொண்டு உரையாற்றினார்.

“திரு ஜேவியர் மிலெய்யைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினேன். நாளை முதல் நாட்டிற்கு நிலைத்தன்மையை வழங்கவேண்டியது அவரது பொறுப்பு,” என்று திரு மாஸ்ஸா கூறினார்.

திரு மாஸ்ஸா பொருளியல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அர்ஜெண்டினா இருபதாண்டுகளில் இல்லாத அளவு மோசமான நெருக்கடியைச் சந்தித்தது.

‘அதிர்ச்சி வைத்தியம்’ மூலம் பொருளியலை மீட்டெடுக்கப் போவதாக திரு மிலெய் உறுதியளித்துள்ளார்.

மத்திய வங்கியை மூடுதல், செலவினக் குறைப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். வாக்காளர்களிடையே அவை வரவேற்பைப் பெற்றாலும் சிக்கன நடவடிக்கைகள் குறித்த அச்சமும் நிலவுகிறது.

சீனா, பிரேசில் போன்ற ‘கம்யூனிஸ்ட்’ நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறும் திரு மிலெய் அமெரிக்காவுடன் வலுவான உறவுகளைப் பேண விருப்பம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அர்ஜெண்டினாவில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பிரேசிலின் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, புதிய அரசாங்கத்தின் வெற்றிக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் திரு மிலெய்யின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

அர்ஜெண்டினாவின் தற்போதைய அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டெஸ், “நான் ஜனநாயகத்தை மதிப்பவன். மக்களின் முடிவை மதிக்கிறேன். முறையான ஆட்சி மாற்றம் தொடர்பில் நாளை முதல் ஜேவியர் மிலெய்யுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, “தீவிர வலதுசாரித் தரப்பு அர்ஜெண்டினாவில் வெற்றி பெற்றுள்ளது. இது சமூகத்தின் முடிவு. ‘நியோலிபரலிசம்’ எனப்படும் பொருளியல் சீர்த்திருத்தக் கொள்கை மனிதகுலத்தின் தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவாது,” என்று கூறியிருக்கிறார்.

சிலி, உருகுவே, பெரு ஆகியவற்றின் அதிபர்களும் திரு ஜேவியர் மிலெய்க்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜைர் போல்சனாரோ, வெற்றிபெற்ற திரு மிலெய்க்கு வாழ்த்துக் கூறியதுடன் தென்னமெரிக்காவில் நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வேளையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு மிலெய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

“ஒட்டுமொத்த உலகமும் கவனமாகக் கண்காணித்தது. உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உங்கள் நாட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவீர்கள். உண்மையாகவே அர்ஜெண்டினாவை மீண்டும் பெருமைக்குரியதாக மாற்றுவீர்கள்” என்று திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!