நைட் சஃபாரியில் நான்கு சிங்கங்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக விலங்கு, கால்நடைச் சேவை இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளது.
நைட் சஃபாரியில், அருகிவரும் ‘ஏஷியாட்டிக்’ இனத்தைச் சேர்ந்த நான்கு சிங்கங்களுக்கும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள ஓர் ஆப்பிரிக்க சிங்கத்துக்கும் உடல்நலம் சரியில்லாததற்கான இலேசான அறிகுறிகள் தென்பட்டதாக விலங்கு, கால்நடைச் சேவை கூறியது. இருமல், தும்மல், சோம்பல் உள்ளிட்டவை அறிகுறிகளில் அடங்கும்.
முன்னதாக, மண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்தச் சிங்கங்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தன.
இந்நிலையில், நான்கு ‘ஏஷியாட்டிக்’ சிங்கங்களின் சளி/எச்சில் மாதிரியை விலங்கு, கால்நடைச் சேவை பரிசோதித்தது.
‘பிசிஆர்’ பரிசோதனையில் அவற்றுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
உடல்நலம் சரியில்லாத அந்த ஆப்பிரிக்க சிங்கத்துக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சிங்கங்களின் ஆரோக்கியத்தை அணுக்கமாகக் கண்காணிக்க, மண்டாய் வனவிலங்கு குழுமத்துடன் இணைந்து தாம் செயல்படுவதாக விலங்கு, கால்நடைச் சேவை தெரிவித்தது.