கைபேசி கோபுரத்தில் ஏறிய ஆடவர்; 30 மணி நேரம் போராடி இறக்கிய தீயணைப்பாளர்கள்

100 மீட்டர் உயர தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்க மறுத்த இந்தோனீசிய ஆடவரை 30 மணி நேரம் போராடி கீழே இறக்கினர் தீயணைப்பாளர்கள்.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 20) காலை 8 மணியளவில் புக்கிட் மலேசியாவின் மெமாலோவில் இருக்கும் அந்தக் கோபுரத்தின் மீது ஏறிய அந்த ஆடவர் இரவு முழுவதும் கோபுரத்திலேயே இருந்தார். அவர் மன அழுத்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பனை எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த அவர், சக ஊழியரிடம் சண்டை போட்ட பிறகு கோபுரத்தின் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. 

போலிஸ் அதிகாரி ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி அந்த ஆடவரை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

அதனையடுத்து, நேற்று பிற்பகல் 3.22 மணிக்கு இரண்டு தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தின் மீது ஏறி அந்த ஆடவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று பிற்பகல் 3.51 மணியளவில் அந்த ஆடவர் கீழே இறக்கப்பட்டார்.

தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து அந்த ஆடவர் கீழே விழாமல் இருப்பதை உறுதி செய்ததாக கனோவிட் தீயணைப்பு மற்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழே இறங்கிய பிறகு அந்த ஆடவர் சிகிச்சைக்காவும் வேறு பரிசோதனைகளுக்காகவும் கனோவிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

#தமிழ்முரசு #கனோவிட் #மலேசியா #கைபேசிகோபுரம் #30மணிநேரபோராட்டம்

Loading...
Load next