பக்கவாதம் வந்தாலும் பாதகமில்லை

பத்மநாபன் சுஜா, 51

உணவு முறையில் கட்டுக்கோப்பு, விபசனா தியானம் வழி சுயநிர்வாகம் என்ற கட்டமைப்பில் வாழும் சுஜா. படம்: டினேஷ் குமார்

நாற்பது வயது வரை நல்ல உடற்பயிற்சிப் பழக்கங்களை மேற்கொண்ட முன்னாள் ஆசிரியர் பத்மநாபன் சுஜாவுக்கு, நெடுந்தொலைவு ஓட்டம் ஒன்றுக்காக பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென தலைவலியும் கழுத்துவலியும் ஏற்பட்டது.

மோண்டிசோரி முறையில் கற்பிக்கும் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய திருவாட்டி சுஜா, இந்தியாவின் பெண்களுக்கான ஆகப் பெரிய நெடுந்தொலைவோட்டமான ‘பிங்கத்தான்’ நடைபெற்ற குருகிராம் என்ற ஊரில் ஓடிக் கொண்டிருந்தார். உடலில் அந்த வலி ஏற்பட்டபோதும் வலியுடன் திருவாட்டி சுஜா, தம் கணவருடன் ஓடிக்கொண்டிருந்தார்.

ரத்த நாளம் ஒன்று அப்போது வெடித்தது மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் தெரிய வந்தது. அப்போது அவருக்கு 44 வயது. ஊட்டியில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த இவருக்கு இந்தச் சம்பவம் புதுடெல்லியின் குருகிராமில் நேர்ந்தது.

“எனக்கு உயர் ரத்த அழுத்தமோ கொழுப்போ இல்லை. இந்தச் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நான் முழுமையான உடல் பரிசோதனைக்குச் சென்றபோது மருத்துவர்கள் எல்லாம் நன்றாக உள்ளது எனக் கூறினர். எனவே இது எனக்கும் என் கணவருக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது,” என்றார் திருவாட்டி சுஜா.

தொடக்கத்தில் படுத்த படுக்கையில் இருந்த திருவாட்டி சுஜா, நான்கு மாதங்களுக்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர் கணுக்கால் பாத பற்றிறுக்கி உதவியுடன் நடமாடுகிறார். தொடக்கத்தில் மெதுவாக நடந்த இவரால் இப்போது சுயமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடிகிறது.

வெகுதூரம் கார் ஓட்டுவதையும் பரதநாட்டியம் ஆடுவதையும் முன்னர் சுலபமாகச் செய்து வந்த திருவாட்டி சுஜா, சிறிது தூரம் நடப்பதற்கும் சிரமப்பட வேண்டிய சூழலை நினைத்து வருந்துகிறார்.

ஆயினும் மன உறுதியை என்றும் விட்டுக்கொடுக்கமாட்டேன். நான் இப்போதும் இயன்றவரை நடந்துசெல்வேன். மன அழுத்தம் சில நேரங்களில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் உறுதியுடன் இருந்தேன் என்று அவர் கூறினார். நாள்தோறும் எளிமையான காய்கறி உணவு வகைகளைச் சாப்பிட்டு கட்டொழுங்குடன் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணி வருகிறார்.

“பாடுவது, கவிதை எழுதுவது, தியானம் செய்வது, இறைவனைத் துதிபாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு திருவாட்டி சுஜா தம்மை இதப்படுத்துகிறார். இறைவனை நான் ஆதாரமாகக் கருதுவேன்,”என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் தமக்குத் தெரிந்த நல்ல மருத்துவர்கள், குடும்பங்கள், நண்பர்கள் எனப் பலரின் அன்பு வார்த்தைகளால் ஊக்கமடைகிறார்.

கோகிலம் ஹன்னா, 68

உயிரைப் பேணி உணர்வூட்டுகிறது திருவாட்டி கோகிலத்தின் கணவர் காட்டும் அன்பு. படம்: டினேஷ் குமார்

தம் 31 வயதில் திருவாட்டி கோகிலம் ஹன்னா, கர்ப்பவதியாக தமது முதல் குழந்தைக்காகக் காத்திருந்த நிலை, எதிர்பாராத விதமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

“ரத்த நாளம் வெடித்த பின்னர் மருத்துமனையில் கோமாவில் கிடந்தேன்,” என்றார் திருவாட்டி கோகிலம். “என் குழந்தையும் பிறவாமல் கலைந்தது.”

துயரமும் பீதியும் நிறைந்த நினைவுகள் மனத்திரையில் நிழலாடியபோதும் தற்போது 68 வயதாக உள்ள திருவாட்டி கோகிலம் சலனமின்றி அமைதியுடன் காணப்பட்டார். பிள்ளையைப் பெற மறுபடியும் முயற்சி செய்யவா என்று தம் கணவரிடம் கேட்டதற்கு கணவரோ, அவ்வாறு செய்து அபாயத்திற்குள்ளாக வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

“பிள்ளை வேண்டுமென்றால் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்,” என்றார் அந்த மாது.

பொறியியல் நன்கு படித்து எல்லாவற்றையும் சுயமாகச் செய்யும் தம் கணவரின் கெட்டிக்காரத்தனத்தைக் கண்டு திருவாட்டி கோகிலம் வியந்து ரசிப்பார். கணவரை தன்னைவிட்டுச் செல்லும்படி கோகிலா கேட்டிருந்தபோதும் பதிலுக்கு அவர், “எனக்கு இப்படி நடந்தால் நீ என்னைவிட்டுப் போவாயா?” எனக் கேட்டதை உருக்கத்துடன் நினைவுகூர்ந்தார்.

நேவல்பேஸ் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த திருவாட்டி கோகிலம், பொறியாளரான தம் கணவர் கொச்சினிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது அவரைச் சந்தித்த சில மாதங்களில் காதலித்து 1982ல் திருமணம் செய்தார். இந்த அன்பு பந்தம், கடந்த 43 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

முற்போக்குச் சிந்தனையாளரான தம் கணவர், புளுக்கமாக இருக்கக்கூடிய பாரம்பரிய உடைகளுக்குப் பதிலான எளிய, சாதாரண உடைகளை அணியும்படி ஊக்குவிப்பார். அத்துடன் அவரே சமையல் வேலைகளைச் செய்வது என் மாமியாரையே வியக்கவைக்கும் என்றார்.

இந்தியாவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்யவேண்டாம் என்று திருமணத்திற்கு முன்பு சிலர் கூறியதை நினைத்துப் பார்க்கும்போது இப்போது சிரிப்புதான் வருவதாக திருவாட்டி கோகிலம் கூறினார். “என் கணவரைப் போல ஆண்களை இந்நாட்டிலேயே காண்பது அரிது என நினைக்கிறேன்,” என்றார் அவர்.

சக்கர நாற்காலியில் இப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று மகிழ்வதாகக் கூறினார். நண்பர்களுடன் சில மாதங்களுக்கு ஒருமுறை வியட்னாம், இஸ்ரேல், இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார் திருவாட்டி கோகிலம். அண்மையில் இந்தியாவுக்கு நான் அண்மையில் தனியாகத்தான் சென்றேன்.

திருவாட்டி சுஜா அளவுக்குத் தம் உணவைக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும் தமக்குப் பிடித்த உணவு வகைகளை அளவுடன் சாப்பிடுவதாகக் கூறினார். எதையும் அளவுக்கு அதிகமாக யோசித்து துன்பப்படவேண்டாம் என்று திருவாட்டி கோகிலா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்குக் கூற விரும்புகிறார்.

பக்கவாதத்தைச் சமாளிப்பதற்கு உத்திகள்

பக்கவாதத்தை வருமுன் காப்பதுடன் அந்நோய் வந்துவிட்டால் கையாள்வது எப்படி என்பது குறித்து சிங்கப்பூர் பக்கவாத சங்கத்தின் தலைவர் ஷாமலா தில்லைராஜா எங்களிடம் பகிர்ந்தார். ‘ஹெல்தியர்எஸ்ஜி’ போன்ற திட்டங்களின் மூலமாக மக்கள் தங்களது உடல்நிலையைக் குடும்ப மருத்துவரின் மூலம் கண்காணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைகுத்திப்போவது இயல்பு என்றாலும் அதுவே பலருக்கு ஆகப் பெரும் சவால் என்று அவர் குறிப்பிட்டார். புலன்களை இயன்றவரையில் நல்ல நிலையில் இயங்கச் செய்வதற்கான மறுவாழ்வு சிகிச்சை தேவைப்பட்டாலும் சில நேரங்களில் சிகிச்சைக்கான செலவு, சிகிச்சைக்குப் பொறுப்பாக அழைத்துச் செல்லும் ஒருவர் இருக்கிறாரா இல்லையா போன்ற அம்சங்கள் தடைகளாக இருக்கக்கூடும்.

“இருந்தபோதும்,2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஒன்ரீஹெப்’ கட்டமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் பக்கவாத புனர்வாழ்வுத் திட்டம், இந்தத் தடைகளை, குறிப்பாக நிதித்தடையைக் களைய திட்டம் கவனம் செலுத்துகிறது,” என்று திருவாட்டி ஷாமலா கூறினார்.

மருத்துவ புனர்வாழ்வுக் குழுவின் அணுக்கமான வழிகாட்டுதலைப் பெறுவது நோயாளிகளுக்கு இன்றியமையாத ஒன்று எனக் குறிப்பிட்ட திருவாட்டி ஷாமலா, சிங்கப்பூர் தேசிய பக்கவாத அமைப்பின் இணையத் தளங்களிலிருந்து சமூக ஊடகங்களிலிருந்தும் பக்கவாதம் குறித்த கேள்விகளை முன்வைக்கலாம்.

தொடர் கண்காணிப்பு தேவை

பக்கவாதத்தால் முதன்முறையாக பாதிக்கப்பட்டோர் மூன்று மாதங்களில் உரிய புனர்வாழ்வுப் பணிகள் செய்யப்படவேண்டும். நோயாளிகளால் வாழ்நாள் முழுவதும் இந்நோய் கையாளப்பட வேண்டியது. காலம் நெடுகிலும் சிகிச்சைகள் தேவைப்படலாம். தேவைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி உரிய உதவி பெறுவது முக்கியம்

பக்கவாதம் தொடர்பான மனநலக்கூறுகள் பொதுமக்களிடையே அதிக கவனம் பெற வேண்டிய விவகாரம் எனக் கூறும் முனைவர் ஷாமலா, மனநல பாதிப்பு எத்தகையது என்பதும் ஆராயப்படவேண்டும். “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரில் மூவரில் ஒருவருக்கு பதற்றநிலையையும் மன அழுத்தத்தையும் உணர்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

சிலருக்கு மருத்துவ சிகிச்சை முறை பொருந்தும். வேறு சிலருக்கோ மனநல ஆலோசகர்களும் நண்பர்களும் தேவைப்படலாம் என்று திருவாட்டி ஷாமலா கூறினார். இது தனித்தனித் தீர்வுகள் அல்ல. மனநலம் பேணுவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை, என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!