ஃபைசர் நிறுவனம்: மூன்றாவது தடுப்பூசி தேவைப்படக்கூடும்
கொவிட்-19 தடுப்பூசியை ஆரம்பக் கட்டத்தில் போட்டுக்கொண்டவர்களுக்கு ஒன்பதாவது மாதம் முதல் 12வது மாதத்திற்குள் மேலும் ஓர் ஊசி போடுவதற்கான சாத்தியத்திற்கு அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் காலம் குறித்து இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நோய் எதிர்ப்புக்கான துணை ஊசி ஒன்று தேவைப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொவிட்-19 முறியடிப்புக் குழுவில் இடம்பெற்று உள்ள தலைமை அறிவியல் அதிகாரி டேவிட் கெஸ்லர் தெரிவித்து உள்ளார்.
இந்த கூடுதல் தடுப்பூசியை எளிதில் பாதிப்படையக் கூடியவர்களுக்குப் போடலாமா என்பது குறித்து ஆரம்பகட்ட ஆராய்சி அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு ஆறு மாதம் முதல் 12 மாதம் வரையிலான காலத்திற்குள் மூன்றாவது கொவிட்-19 ஊசி தேவைப் படலாம் என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆல்பர்ட் பௌர்லா கூறியுள்ளார்.