இனவாதக் கருத்து: விரிவுரையாளரை பணிநீக்கம் செய்யும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

தவறான நடத்தை காரணமாக மூத்த விரிவுரையாளர் டான் பூன் லீயை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஈடுபட்டு வருகிறது.

ஆர்ச்சர்ட் சாலையில் கலப்பினத் தம்பதி மீது திரு டான் இனவாதக் கருத்துகள் கூறுவதைக் காட்டும் காணொளி ஒன்று இம்மாதம் 6ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி முன்னாள் மாணவியான நூருல் ஃபாத்திமா இஸ்கந்தர் என்பவர், 2017ல் வகுப்பில் திரு டான் இஸ்லாமிய சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறியிருந்ததாக இம்மாதம் 9ஆம் தேதி இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியிடமிருந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தான் விசாரணையை முடித்த பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி தெரிவித்தது.

பணியாளர் நடத்தை விதி மீறப்பட்டதன் தொடர்பில் பொறியியல் பள்ளி விரிவுரையாளரான திரு டான் மீது தான் குற்றஞ்சாட்டியிருப்பதாகவும் அவரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டு வருவதாகவும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி கூறியது.

“நமது சமுதாயத்தில் கலாசார, இன, சமய வேற்றுமைகளை எங்களது பணியாளர்கள் மதித்து நடக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்கள் சமயச் சார்பற்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.

“இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை, எங்களது பலதுறைத் தொழிற்கல்லூரி சமூகத்தினருக்கு பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, அனைவரையும் மதித்து நடக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவதில் நாங்கள் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது,” என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தற்போது பயிலும் குமாரி நூருல், 22, மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துகளை திரு டான் 2017ல் கூறியிருந்ததாக தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்பில் குமாரி நூருல் அப்போது கூறியிருந்த கருத்துகளைப் பல்வேறு கருத்து சேகரிப்புத் தளங்களில் தேடியும் தன்னால் அவற்றை கண்டறிய முடியவில்லை என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி கூறியது.

“நூருல் உடனான எங்களது உரையாடலில், அந்தச் சம்பவம் குறித்த கருத்துகளை மின்னஞ்சல் வழி அனுப்பியிருந்தாரா அல்லது 2017ல் இடம்பெற்ற குழுக் கலந்துரையாடலின்போது அவற்றை முன்வைத்திருந்தாரா என்பது குறித்து அவரால் நினைவுகூற முடியவில்லை,” என்று பலதுறைத் தொழிற்கல்லூரி சொன்னது.

“எனினும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். மேலும், பாதுகாப்பான முறையில் மாணவர்கள் தங்களது கருத்துகளைக் கூறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று அது விவரித்தது.

திரு டானின் கருத்துகள் ஏற்படுத்தியிருந்த மன சங்கடத்திற்காக குமாரி நூருலிடம் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இதன் தொடர்பில் நூருலுக்கு தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!