‘இந்தியாவில் ஒளிமயமான வர்த்தக வாய்ப்புகள்’

இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகள் மீது சிங்கப்பூரும் சிங்கப்பூர் நிறுவனங்களும் நம்பிக்கை வைத்து உள்ளதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் மின்னிலக்க வர்த்தக தகவல் உட்பட தங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், திங்களன்று புதுெடல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து இந்தியப் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இரு தரப்பு உறவு அதிவேகத்தில் வளர்ச்சியடைந்து வருவது திருப்தியளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இரு தலைவர்களும் பொருளியல் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, இந்திய-சிங்கப்பூர் பரந்த அளவிலான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, மின்னிலக்க பொருளியல் உள்ளிட்ட விவகாரங்களை விவாதித்தனர்.

உள்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை, மின்னிலக்க பணப் பரிமாற்றம், புத்தாக்கம், ஆளுமை ஆகியவற்றில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் கூறியது. இந்தியாவின் பொருளியல், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூக, பொருளியல் உத்திகள் குறித்து தானும் திரு மோடியுடன் பேசியதாக அமைச்சர் தர்மன் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity