‘யோ-யோ’ விளையாட்டில் முத்திரை பதிக்கும் கார்த்திக்

கார்த்திக் தேவராஜ் தனது 13வது வயதில் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்குப் பதிலாக ‘யோ-யோ’ விளையாட்டின் மீது நாட்டம் கொண்டார்.

அன்று வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கியது பின்னாளில் அவருக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.  

“என் நெருங்கிய நண்பர் எனக்கு ‘யோ-யோ’ விளையாட்டை முதலில் அறிமுகப்படுத்தினார். தினமும் நான் பள்ளி முடிந்து கிட்டத்தட்ட 5 மணி நேரம் தொடர்ந்து ‘யோ-யோ’ விளையாடிப் பழகினேன்,” என்றார் கார்த்திக். 

சில மாதங்களில், தனது முதல் ‘யோ-யோ’ போட்டிக்காக சிங்கப்பூரில் மேடையேறினார்.

“ஜப்பான், தாய்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். வெற்றி பெறவில்லை என்றாலும், அவர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத தருணங்கள்,” என்றார்.

முதல்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ‘யோ-யோ’ விளையாடிய கார்த்திக், உற்சாகமடைந்தார். சிங்கப்பூரில் ஒரு ‘யோ-யோ’ வெற்றியாளராக முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், சிறு போட்டிகள் எல்லாவற்றிலும் மனந்தளராமல் கலந்துகொண்டார்.

“நடனத்துக்கும் பாடலுக்கும் எப்படி ஓர் அமைப்பு இருக்கிறதோ, ‘யோ-யோ’ விளையாட்டுக்கும் ஒரு தனித்துவமான அசைவு அமைப்பு தேவை. அதன் மூலம் ஒரு ‘யோ-யோ’ கலைஞர் தனது செயல்திறனால் மக்களை கவரலாம்,” என்றார் அவர்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ‘யோ-யோ’ போட்டியில் பல ஆசிய நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்பாராத விதமாக முதல் இடத்தைப் பிடித்து வெற்றிவாகை சூடினார் கார்த்திக். தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய ‘யோ-யோ’ வெற்றியாளர் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். 

“கொவிட்-19 தொற்று காரணமாக ‘யோ-யோ’ போட்டிகளும் பயிற்சிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் நானும் ‘யோ-யோ’ விளையாடுவதை அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ளவில்லை,” என்றார். 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறுதியுடன் களம் இறங்கினார் கார்த்திக். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜூலை 2023ல் மீண்டும் சிங்கப்பூர் தேசிய ‘யோ-யோ’ வெற்றியாளர் போட்டியில் பங்குபெற்றார். ஆனால், இம்முறை ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். 

“என் ‘யோ-யோ’ ஆற்றலை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டேன்,” என்றார். 

தற்போது 23 வயதாகும் கார்த்திக், பல தேசிய மேடைகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஒரு ‘யோ-யோ’ வெற்றியாளராகத் திகழ்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியாவிலும் தாய்லாந்திலும் இடம்பெற்ற ஆசிய ‘யோ-யோ’ போட்டிகளில் முதலிடம் பிடித்தார்.  

தற்போது கார்த்திக், கிடைக்கும் நேரங்களில் சிறு குழந்தைகளுக்கு ‘யோ-யோ’ பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.

“அங்கீகாரம் கிடைப்பதில் கவனம் செலுத்தாமல், விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்று இக்கால இளையர்கள் யோசிக்க வேண்டும். ‘யோ-யோ’ என் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை,” என்றார்.

ஆர்வமும் விடாமுயற்சியும் ஒவ்வொரு கை அசைவிலும் இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்று உறுதிபடக் கூறுகிறார் இந்த இளையர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!