புகாரில் சிக்கிய வேட்பாளர்; மன்னிப்பு கோரினார்

செங்காங் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான திருவாட்டி ரயீசா கானுக்கு எதிராக போலிசில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. 

சிங்கப்பூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறார்கள் என்று திருவாட்டி ரயீசா தெரிவித்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் சென்ற வார இறுதியில் அந்தப் புகார்கள் அளிக்கப்பட்டன. 

குடிமக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், பணக்கார சீனர்களையும் வெள்ளை இன மக்களையும் சட்டத்தின்கீழ் வேறுபட்ட முறையில் அதிகாரிகள் நடத்துகிறார்கள் என்றும் திருவாட்டி ரயீசா, 26, கருத்து தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது என்று போலிஸ் அறிக்கை ஒன்றில் இன்று குறிப்பிட்டது.

சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத் தீர்ப்பு பற்றிய செய்தி தொடர்பாகக் கருத்துரைத்த திருவாட்டி ரயீசா, சிறுபான்மையினரை சிங்கப்பூர் ஈவு இரக்கமின்றி சிறையில் அடைப்பதாகவும் பள்ளிவாசல் தலைவர்களை அலைக்கழிப்பதாகவும் ஆனால் ஊழலில் சிக்கிய தேவாலயத் தலைவர்களை விடுவித்துவிட்டதாகவும் கருத்து உரைத்தார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் ஆலோசித்ததாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

அதன் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு இன்றிரவு பதிலளித்த திருவாட்டி ரயீசா, சமூகப் பிரிவினையை உருவாக்கும் நோக்கில் அவற்றைத் தாம் பதிவிடவில்லை என்றார்.

“எனது கருத்துகள் எந்த ஒரு இனக் குழுவையோ அல்லது சமூகத்தையோ காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இன வேறுபாடின்றி சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் வாஞ்சை கொள்வேன். அந்த முறையில் சரியில்லாத கருத்துகளைப் பதிவிட்டுவிட்டேன். போலிஸ் விசாரணைகளில் ஒத்துழைப்பு நல்குவேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார். 

திருவாட்டி ரயீசாவின் பதிவுகள் பற்றி கருத்துரைக்க மறுத்துவிட்ட, பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர், திருவாட்டி கான் தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுபடுவார் என்றும் தேர்தலுக்குப் பிறகு இந்த விஷயம் பற்றி கட்சி ஆலோசிக்கும் என்றும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon