வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கும் திட்டம் இன்னமும் நிலுவையில் உள்ளது

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களைச் சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் ஒன்று தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டு 16 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஊழியர்களைப் பாதுகாக்கவும் கிருமி கட்டுக்கடங்காமல் பரவும் அபாயத்தை மட்டுப்படுத்தவுமே நடமாட்டக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழிடம் மனிதவள அமைச்சு கூறியது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கடந்த மாதம் புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் உருவெடுத்துள்ளன.

நேற்றைய (ஆகஸ்ட் 28) நிலவரப்படி, ஊழியர் விடுதிகளுடன் தொடர்புடைய ஆறு தொற்றுக் குழுமங்கள் உள்ளன. வெஸ்ட்லைட் ஜுனிப்பர், நார்த் கோஸ்ட் லாட்ஜ் உள்ளிட்டவை அந்த விடுதிகளில் அடங்கும்.

விடுதிகளில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையைப் பொறுத்து, வேறுபட்ட நடைமுறைகளை கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து மனிதவள அமைச்சு கடைப்பிடித்து வருகிறது.

அதன்படி, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விடுதிகளில் பல்வேறு அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி உண்டு. விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்களுக்குச் செல்வது, ஐந்து பேர் கொண்ட குழுக்களாக அமர்ந்து உணவருந்துவது உள்ளிட்டவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். மாறாக, தடுப்பூசி போட்டிராத ஊழியர்கள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

இரு விடுதிகளைத் தனிமைப்படுத்தும் இடங்களாக கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விடுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களும் விடுதிகளைவிட்டு வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பருக்குள், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 54,505 பேர் வெளிநாட்டு ஊழியர்களாவர். இதுநாள் வரை, சிங்கப்பூரில் மொத்தம் 66,000க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பதிவாகியுள்ளது.

இருப்பினும், விடுதிவாசிகளில் 10ல் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதை நியாயப்படுத்துவது கடினம் என்று தொற்றுநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, கட்டுப்பாடுகள் காரணமாக ஊழியர்களின் மனநலனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவர்கள் சுட்டினர்.

சமூகத்திலிருந்து விடுதிகளுக்கும் விடுதிகளிலிருந்து சமூகத்திற்கும் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கவே விடுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் சொன்னார்.

எனினும் கடந்த ஆண்டைப்போல அல்லாமல், தற்போது விடுதிகளைவிட சமூக அளவிலேயே கிருமித்தொற்று அதிகம் தென்படுகிறது.

“சமூக அளவில் நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் அதேவேளையில், விடுதிகளிலும் அவற்றைத் தளர்த்துவது குறித்து நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்,” என்றார் அவர்.

வேலைக்கும் அருகிலுள்ள பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்லவும் மருத்துவரைப் பார்க்கவும் மட்டுமே விடுதிகளைவிட்டு வெளியேற வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் மாதத்திற்கு ஒருமுறை சமூகத்திற்குத் திரும்ப வகைசெய்யும் முன்னோடித் திட்டம் ஒன்று கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அண்மையில் கிருமிப் பரவல் அதிகரித்தது உள்ளிட்ட சில காரணங்களுக்காக அத்திட்டம் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லவும் ஒருமாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புடன் வாழும் நடைமுறைகளைத் தான் தொடர்ந்து உறுதிசெய்து வருவதாகவும் கண்காணிப்புப் பரிசோதனை முறையைத் தான் தொடர்ந்து நிலைநாட்டி வருவதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.

“மனிதவள அமைச்சு நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. கட்டுப்பாடுகளைப் படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் அமைச்சு மேலும் தளர்த்தும்,” என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

டெல்டா வகை கிருமிக்கு வேகமாகப் பரவக்கூடிய ஆற்றல் இருப்பதால், விடுதிகளில் கொவிட்-19 தொற்றுப் பரவல் தவிர்க்க முடியாத ஒன்று என்று பேராசிரியர் குக் சொன்னார்.

“மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தாலும், 60 விழுக்காட்டினரிடம் இயல்பாக நோயெதிர்ப்பாற்றல் இருந்தாலும், பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும்போது தொற்றுக் குழுமங்கள் உருவெடுப்பதை நாம் எதிர்பார்க்கலாம். எனினும், நோயெதிர்ப்பாற்றல் இத்தகைய நிலையை எட்டும்போது, பலருக்குத் தொற்று உறுதியானாலும் அதற்கான அறிகுறிகள் இலேசாகவே இருக்கும்,” என்று அவர் விவரித்தார்.

நார்த் கோஸ்ட் லாட்ஜ் விடுதி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி லிம். அந்த விடுதியில் 139 பேருக்குத் தொற்று உறுதியானது.

“அங்கு 5,300 பேரிடம் கொவிட்-19 பரிசோதனை நடத்தியதில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டிருப்பது எனக்குச் சற்று ஆச்சரியம் தந்தது.

“என்னைப் பொறுத்தவரை, மனநலம், வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிய சிங்கப்பூர் எந்த அளவுக்கு சிறந்த ஓர் இடமாக உள்ளது போன்ற மற்ற அம்சங்களைக் கவனித்தில் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது,” என்றார் அவர்.

கொவிட்-19 கிருமியுடன் வாழும் நிலையை நோக்கிச் சிங்கப்பூர் முன்னெடுத்துவரும் வேளையில், சமூகத்தில் உள்ளவர்களுக்கு விதிக்கும் அதே கட்டுப்பாடுகளை வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அதிகாரிகள் விதிக்கலாம் என்று பேராசிரியர் குக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!