மின்சாரத்திற்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலையில் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூரர்கள் மின்சாரத்திற்கு அதிகம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு ஒரு புறமிருக்க, வீட்டில் இருந்து வேலை, கற்றல், கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைதல் போன்ற புதியதொரு சூழ்நிலை வழக்கமாகி வருவதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து அதற்கான செலவு மேலும் கூடியுள்ளது.

சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளரான திரு ராய் சான், 2018ல் தேசிய மின் விநியோக நிறுவனமான எஸ்பி குழுமத்திலிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தி, திறந்த மின்சாரச் சந்தையில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு மாறினார்.

இதனால் 30 விழுக்காடு வரை மின்சாரக் கட்டணத்தை அவரால் சேமிக்க முடிந்தது.

ஆனால் ‘செனோகோ எனர்ஜி’ வழங்கிய நிலையான மின்சாரக் கட்டணத் திட்டம் இம்மாதம் காலாவதியாவதால் மணிக்கு ஒரு கிலோவாட் 24.9 காசு என்ற விலையில் அவர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டி உள்ளது.

இது, முன்பு மணிக்கு ஒரு கிலோவாட் 15.89 காசுடன் ஒப்பிட்டால் ஏறக்குறைய 60 விழுக்காடு அதிகமாகும்.

சான் போன்ற பலர் இந்தக் கட்டண உயர்வால் திகைத்துப் போயுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் திறந்த மின்சாரச் சந்தையில் உள்ள நிறுவனங்கள் மின்சாரக் கட்டணத்தை கூட்டியுள்ளன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில இதழுக்குப் பேட்டி அளித்த சிலர், ஒழுங்குப்படுத்தப்பட்ட கட்டணத்திற்கும் திறந்த மின்சாரச் சந்தையின் கட்டணங்களுக்கும் இடையே இடைவெளி குறைந்து விட்டதாகக் கூறினர்.

அதாவது, 30 விழுக்காடாக இருந்த வித்தியாசம் தற்போது 10 விழுக்காடாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், லாபம் ஈட்ட முடியாததால் திறந்த மின்சாரச் சந்தையில் இருந்து விலகுவதாக சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிங்கப்பூரின் ஆகப்பெரிய மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ‘ஐசுவிட்ச்’ முதல் முறையாக அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நவம்பரிலிருந்து மின் விநியோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக இம்மாதம் 13 ஆம் தேதி அது அறிவித்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ‘ஓம் எனர்ஜி’ நிறுவனமும் மின் விநியோகச் சேவையிலிருந்து விலகுவதாக வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்தி உள்ளது.

நிலையற்ற மின்சாரச் சந்தையில் மின்சாரக் கட்டணத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது இயலாத காரியம் என்று ‘ஓம் எனர்ஜி’ காரணம் கூறியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இதேபோன்ற முடிவை மற்ற நிறுவனங்களும் எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்கு அடையாளமாக பத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி இருப்பதாகவும் அல்லது தங்களுடைய இணையப் பக்கத்திலிருந்து மின்சாரக் கட்டண விவரங்களை அகற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!