வூஹான் வைரஸ் கிருமி: சீனாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு

சீனாவில் ‘சார்ஸ்’ போன்றதொரு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 291ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் இன்று (ஜனவரி 21) தெரிவித்தனர்.

சீனாவின் மத்திய நகரமான வூஹானில் பரவும் இந்த வைரஸ் கிருமியால் ஆறாவது நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 258 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக வூஹான் மேயர் ஸாவ் ஸியன் வாங் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், 900க்கும் அதிகமானோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

வூஹான் நகரில் 15 மருத்துவ ஊழியர்களுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வூஹான் நகராட்சி சுகாதார ஆணையம் வெளியிட்ட வேறோர் அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த வைரஸ் கிருமி, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றக்கூடியது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றக்கூடியது என தொடக்கத்தில் நம்பப்பட்டாலும், அது மனிதர்களுக்கு இடையே தொற்றக்கூடியது என்பதை உலக சுகாதார நிறுவனம் இப்போது உறுதிப்படுத்தி உள்ளது.

சீனாவில் 2003ஆம் ஆண்டில் பரவிய ‘சார்ஸ்’ கிருமியை ‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வூஹான் வைரஸ் கிருமி ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சார்ஸ்’ கிருமி 800 பேரின் உயிரைப் பறித்தது.
சீனாவில் இந்த வைரஸ் கிருமி வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பொதுவாக இன்று ஆசியப் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை, குறிப்பாக விமான நிறுவனங்கள், போக்குவரத்துப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது.

சீனப் புத்தாண்டிற்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே மில்லியன் கணக்கானோர் பயணம் மேற்கொள்வர் என்பதால் வூஹான் கிருமி கட்டுக்கடங்காமல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவுக்கு வெளியே தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தைவானில் முதல் சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமை மேம்படும் வரை வூஹானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தைவானிய அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டது.

பிலிப்பீன்சிலும் ஆஸ்திரேலியாவிலும் இரு நோயாளிகளுக்கு இந்த வைரஸ் கிருமிக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதால் அந்நாடுகளின் சுகாதார அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மத்திய பிலிப்பீன்சில் சீபு நகரில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். வூஹானிலிருந்து தமது தாயாருடன் நாடு திரும்பிய அவனுக்கு இருமல், காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆடவர் ஒருவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 

வூஹான் கிருமியால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை குவீன்ஸ்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். வூஹானிலிருந்து அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வூஹானுக்குச் செல்ல முன்பதிவு செய்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணத்தை ரத்து செய்தால் அதற்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என சீனப் பயண நிறுவனங்கள் தெரிவித்தன.

வூஹான் வைரஸ் குறித்து கலந்தாலோசிக்க உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வூஹான் கிருமி சிங்கப்பூரில் பரவுவதைத் தடுக்க இங்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக, சீனாவிலிருந்து சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளிடம் நாளை முதல் தீவிர மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். 

சாங்கி விமான நிலையத்தில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் முறை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #வூஹான் #சீனா #மலேசியா #தென்கொரியா #ஆஸ்திரேலியா